விழி மூடி யோசித்தால்..!

புதிதாக வந்த நகரம், மனதில் புது ஏக்கம் விதைத்திருந்தது .

மொழி தெரியாது. முகங்கள் அந்நியமாய் தோன்றின. அறிகுறிகளுக்கு அர்த்தம் புரியாத சூழல்.
தன்னையே சந்தேகிக்க வைக்கும் தனிமையுடன் இருந்தாள் இதுலா ராஜகுமாரி ,
மருத்துவம் படிக்கும் அவளுக்கே மனநலத்துக்கான தேவை ஏற்பட்டது.

மிக பிரபலமான பிர்லா மருத்துவமனையில், அவள் Intern. சுற்றும் வார்டுகளும், நோயாளிகளும், டாக்டர்களும் – எல்லாம் புதிய உலகம்.

அவன்...

முகத்தில் மெல்லிய மெளனம். பேச்சில் எளிய நயம். தொழில்முறை நேர்த்தியோடு கலந்த ஒரு சூடான தேநீர் போல இருந்தான்.


முதலில் அவள் அவனை காணவில்லை.
மொழிவிட்டு பிரிந்த  சோக தனிமையில் இருந்தவள், அவனை கேட்டாள்.
ஒரு ringtone-ல். “விழிமூடி யோசித்தால்...”

தமிழ்!
அந்த பாட்டு – அந்த குரல் – அந்த நொடி.
வெறுமையாய் இருந்த உள்ளம் ராகமாய் மாறியது.
அந்த ringtone மூலமாக அவள் தமிழை எதிர்பார்க்கத்தொடங்கினாள் – அவனைப்போலவே.

முதல் வாரம் கடந்து விட்டது. மூன்றாவது வாரம் வரை, அவன் பெயரை மட்டுமே தெரிந்து கொண்டாள்.
நான் ஒரு Intern. அவர் Doctor.

வார்டில் நோயாளிகளை பார்க்கும் தருணம் அவன் சொல்லும் குறிப்புகளை எப்பொழுதும் தன் உதட்டிடுக்ககில் மெல்ல பற்களால் கடிக்கும் அந்த cello பேனாவால் குறிப்பெடுப்பாள் இதுலா. குறிப்புகள் வாயிலாக அவன் இவளை பார்க்கும் அந்த நொடி, அவளுக்கு மட்டும் தெரியும்: இது தான் ஈர்ப்பு.

ஒரு முறை, ஒரு நோயாளியின்   clinical discussion நடந்து கொண்டிருந்தபோது, அவள் எதையோ சுட்டிக்காட்டினாள்.
அவன் நிமிர்ந்து பார்த்தான். கண்களில் ஒரு சிறு அசரட்டம்.
அவள் பயந்துவிட்டாள்.
ஆனால் அவன் சொன்னான்,



"நீங்க கவனிக்கிற விதம் நல்லா இருக்கு."

முதல்முறை, அவளின் உள்ளம் சொந்தமாக ஒலித்தது. அவளுக்காக. தனிமை விரும்பியான, தன்னை பற்றி யோசிக்காத அவளுக்கு இது புது அனுபவம். 
அவளுக்கு அவன் Senior Doctor இல்லை.
அவள் காதலிக்கத் தொடங்கிவிட்டாள்.

அதை ஏற்க இழிவில்லை. குற்றமில்லை. இந்த மன தெளிவை அவள் பசியின்றி , பசியாற்றினாள்.  
தொடர்ந்த நாட்களில், வார்டில் அவனை சந்திக்கும் நேரங்களில்  – மழையிலும், பனியிலும் – அவளுள் உலகம் மட்டும் நனையத் தொடங்கியது.

நாட்கள் ஓடின. அவள் தேர்வில் தேர்ச்சி பெற்று, மற்றொரு மாநிலத்திற்கு இடமாற்றம்.


பிரியாவிடை நேரம்.

புரியாமலே உள்ளத்தை நெருக்கும் ஒரு வலி.
அவள் மனதில் ஒரு குரல்: சொல்லிவிடு.
தவறா இருந்தால் அதற்குப் பதில் வரும்.
சொல்லாமல் போனால், ஒரு வாழ்க்கை நிழலாகவே போய்விடும்.

இதுலா அவனை சந்தித்தாள்.
ஒரு மென்மையான மழைக்கால மதியம்.
சுற்றும் உலகம் எதையுமே கேட்காத மாதிரி இருந்தது.


அவள் சொன்னாள்,

"நீங்க என்னோட Senior Doctor. ஆனா அதைக் கடந்து… நான் உங்களைப் பார்த்து அதிகமா நேசிக்க ஆரம்பிச்சேன். இது வரைக்கும் மனசுக்குள்ள தான் வைச்சிருந்தேன். ஒரு பதில் கேக்கனும்னு இல்ல. உங்களுக்கு அந்த உண்மை தெரிஞ்சா மட்டும் போதும்னு தோணுது."

அவன் அவளைக் கேட்டுக்கொண்டிருந்தான். அமைதியாய். பார்வையில் துளியும் கசங்காத மரியாதை.

அவள் தொடர்ந்தாள் ..

"நீங்க ரொம்ப நல்லவர் . நம்ம இருவருக்கும் எதிர்கால பாதைகள் வேறா இருக்கலாம். ஆனா இந்த உணர்வோட நான் நிறைவா இருக்கேன். இப்போ எதுவும் சொல்லாம போனாலும்… எனக்குள் இது ஒரு நிறைவான கணம்."


அவன் மெதுவாய் ஒரு புன்னகை உதிர்த்தான். வார்த்தைகள் இல்லாமல் – புரிந்த ஒளி.

அது போதுமானது.

அவள் அந்த நிமிஷத்துக்குப் பிறகு, உயிரோடு இருந்தாள். காதல் ஏற்கப்பட்டதும்  இல்லை. மறுக்கப்பட்டதும்  இல்லை.
ஒரு மெளன மரியாதைதான் பதில்.

விடைபெற்ற பிறகு, நாட்கள் பறந்து சென்றன. நகரங்கள் மாறின. முகங்கள் மாறின.
அவனோ...
அந்த ringtone-ல் மட்டும் இருந்து கொண்டான்.

அவளோ,  Aditya Birla Memorial Hospital ல் நியூராலஜி துறையில் அவன் ஆற்றிய ஒரு கருத்தரங்கத்தின் அவன் உரையை அவளது Laptop ல்  “SUNRISE” folder-ல் இருக்கும் அந்த blurred வீடியோவில் புதைந்து மீண்டாள்.


காலங்கள் நாட்காட்டியில் எட்டு வருடங்கள் கழிந்தன.

ஒரு முறை, சென்னையில் கிண்டி மருத்துவமனையில் நடந்த அகில இந்திய மாநாட்டில், அவன் பேச வந்தபோது,
அவள் பின்வரிசையில் இருந்தாள். அவன் மேடையில் பேசினான்.
விழிகளால் மட்டும் சந்தித்தனர்.
புன்னகையால் மட்டும் உரையாடினர்.

அந்த நொடிக்கு பின்னால், ஒரு வாழ்வு இருந்தது. 
அதை மௌனமாய் கடந்து அவள் விழி மூடி யோசித்தாள்(ல்)......!



#me_nitin #BadInScripting

*******************************************************************************

Comments

  1. Good in scripting என்று மாற வேண்டிய நேரம் இது, நிதின். அருமையான பதிவு. காதலுக்கு மரியாதை செய்தது போல.

    ReplyDelete
  2. Nyc flow da...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பாரதியாரின் ஆத்திச்சூடி _ ; புதுக்கதை விளக்கம்

நினைவுகளுக்கு இடமில்லை!!

ஒரு வில்லன் இருந்தான்