பிறர் தர வாரா

"ஹலோ, வந்துட்டியா..? இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்?"

"ஆன் த வே. டிராபிக். 5 மினிட்ஸ்"

 5 மினிட்ஸ் க்கான  உட்பொருளை 15 நிமிடம் என நன்கு அறிந்து வைத்திருந்தான் ஆதித்ய கரிகாலன் (எ) ஆதி. 900 வினாடிகளில் ஆறு வருடத்தை ஒரு முறை மனத்திரையில் ஓட்டிக் கொண்டிருந்தான்.


 முதல் நாள் மூன்றாம் வரிசையில் அவளும், நான்காம் வரிசையில் இவனும் கையில் வெல்கம் கிட்டுடன் அமர்ந்திருக்கையில், மனிதவள மேலாளரின் (HR Manager) அந்த நீண்ட நெடிய கம்பெனி புராணம் கேட்க, அந்த நாள் இன்னுமும் இவனுக்கு நினைவிருக்கிறது. அவ்வளவு ஏன் அன்றைய மணமும் மனதில் இருக்கிறது. Yardley Jasmine. அது அவள் மீது என்பதை 67 ஆம் நாள் உறுதி செய்துகொண்டான்.


  வேலை முடிந்து வீடு திரும்ப எண்ணி மணிக்கட்டை திருப்பி காலம் கண்டபோது அது சொல்லிய பதில், 11 மணி 22 நிமிடங்கள். குறுஞ்செய்தி கூறிய எண்ணுடைய வண்டியை துப்பறிந்து ஏறி அமர, பக்கத்து இருக்கையில் இருந்து வந்த அதே Jasmine, மனம் கவர்ந்த மணம்.


 அப்படி இப்படி  என்று ஓடிய நாட்கள், நூறை தாண்ட அவள் பெயர்,  அவளின் தோழிகள், எம்ப்ளாயி ஐடி, ஈமெயில் ஐடி முக்கியமாக அவள் மொபைல் நம்பர் என அனைத்தையும் விசாரிக்காமல் விசாரித்து வைத்திருந்தான்.


Cupid அசரீரி:
*எது தேவை இருந்ததோ அது கிடைத்துவிட்டது. எது தேவையோ அது கிடைத்துக்கொண்டே இருக்கிறது. எது தேவைப்படுமோ அதுவும் கிடைக்கப்பெறும்

 நாட்கள் 200ஐ கடக்க, இருமுறை டீம் அவுட்டிங், ஒருமுறை நண்பர்கள் குழுவுடன் சினிமா என சகல சம்பிரதாயங்களும் நடந்து நிறைவேறியது. அவ்வப்போது வாட்ஸ் அப்பில் அவள் ஆன்லைனில் இருப்பதை உறுதி செய்து குரூப்பில் தேவையில்லாத ஆனால் சிறிது கண்ணியமான ஆணிகளை பதிவு செய்து, அதை அவள் பார்த்து விட்டால் செல்லை பார்த்து பல்லைக் காட்டும் சாதாரண வியாதியும் வாய்க்கப் பெற்றான்.

 500 கடக்க அவ்வப்போது வாட்ஸ்அப் மெசேஜ், ஒரு நிமிட நீள செல்லுரையாடல், இருமுறை வண்டியில் கொண்டு அவளை டிராப் செய்யும் பாக்கியம் என நாகரிக காதலின் அஸ்திவாரம் செவ்வனே மேற்கொண்டான். ஆதி,
 தானும் சாதாரண மனிதன் என்பதை நிரூபித்துக் கொண்டே இருந்தான்.


 நாட்களின் எண்ணிக்கை விட்டுப்போனது. எத்தனையாவது நாள், எத்தனையாவது மணி என தெரியவில்லை இவன் நீரூற்றி வந்த அவளின் மன செடியில் இவன் காத்திருந்து வரம் கேட்ட பூ பூத்திருந்தது. அதுமுதல் பேச்சிலும் செயலிலும் அப்பூமணம் வீச தயாரானாள், அதை மணக்க தயாரானான் இவன்.


 ஞாயிற்றுக்கிழமைகளில் 28 மணி நேரம் இருக்கக் கூடாதா என்று சபித்துக் கொண்டும் சலித்துக் கொண்டும் அவர்களின் காதல் ரசம் கொதித்து கொண்டே வருடம் நான்கானது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் சண்டைகளும் வந்து சென்றது. அதன் சமாதான முயற்சியில்  இருவரும் ஆளுக்கொரு முறை இட ஒதுக்கீடு முறையில் ஈடுபட்டு தீர்த்துக் கொண்டார்கள்.


அவளின் 26ஆம் பிறந்தநாள் எண்ணிலடங்கா ஆச்சரிய பரிசுகள் கொடுத்து அசத்தி தீர்த்தான். அவளும் பேருவகை கொண்டு பெருமகிழ்ச்சியுடன் கண் கலங்கினாள். 


 அது முடிந்து வாரம் ஒன்றானது "டிட்டிடோய்ங்" அவன் எடுத்து வாட்ஸ் அப்பில் திறந்து பார்த்தான். அவளிடமிருந்து நீண்ட நெடிய வாக்கியங்கள் உடனிருக்க, ஏதோ பார்வேர்ட் மெசேஜ் என எண்ணி படிக்கச்சலித்தான் ஆதி. அனுப்பியது அவளாதனால், படிக்க ஆரம்பிக்க மூன்று நிமிடம் முழுமையாக படித்து முடித்தபோது என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது கூட உணரமுடியாமல் தத்தளித்தான்.


 குருஞ்செய்தியின் சாரம்சம்: "வீட்ல என்ன சொல்றதுன்னு தெரியல. அம்மா கிட்ட சொல்ல பயமா இருக்கு. லைப் லாங் நமக்குள்ள எந்த பிரச்சினை வராம இருக்கனும். உங்க வீட்ல என்ன பிடிக்கலைனு சொல்லிட்டா?" என நீண்டது பட்டியல்.  அடுத்த நாள் அதன் தாக்கம் நேரில் பார்த்த போது குறைந்தது. வழக்கமாக சமாதான முயற்சியோடு, மன தைரியமும் ஊட்டினான்.


 அது முதல் 5 ஆண்டுகளாய் ஊதிய பலூன் காற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது. அவள் மட்டும் காரணமல்ல. இவனும், காற்று  இறங்கியும்  அதை மீண்டும் காற்று அடிக்க முயற்சிக்கவில்லை. எங்கோ எப்படியோ விழுந்த விரிசலை சரி செய்யும் முயற்சியை எவரும் எடுக்கவில்லை. தினமும் ஒலித்த அலைபேசி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, வாரம் இருமுறை என குறைந்தது.


காலதேவன் கருணையற்றவன்.  2189 ஆம் நாள். "ஹலோ...!எப்படி இருக்க? ...சண்டே பாக்கலாமா?.... சரி ஓகே.!... ஒரு மூணு மணி போல ..."

நிற்க. 

 15 நிமிடம் கழித்து ஆறு வருட திரையோட்டம் முடிந்தது. கதவைத்திறந்து எதிரில் வந்து அமர்ந்த அவளைப் பார்த்தபோது, அதே 'மனம் கவர்ந்த மணம்'

" ரொம்ப பிசியாகிட்ட போல. ஆபீஸ்ல கூட சரியா பாக்க முடியல. அப்புறம், என்ன எல்லாம் எப்படி போகுது .?" என அவளின் பதிலுக்கு காத்திருக்காமல் சொல்ல வந்த அனைத்தையும் மறந்து விடாமல் சொல்லி விட வேண்டும் என வார்த்தையில் போட்டுக் கொண்டிருந்தான். 

அதன் போக்கிலேயே தொடர்ந்தான் "ஆறு வருஷம் எப்படி போச்சுன்னு தெரியல. என்ன பிரச்சினைனு உனக்கும் தெரியல, எனக்கும் புரியல. இப்படி ஒரு நாள் வரும் இப்படியெல்லாம் நடக்கும்னு நான் நினைக்கணும் னு கூட நினைக்கல. இதுலாம் நடந்துருச்சுனு நினைச்சாலே நரகமா இருக்கு."   இது எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தே பேசினான் ஆதி.

" சரி ஓகே..! ரெண்டு பேர்ல யாருமே இதை சரி பண்ணனும் னு நினைக்கல. உன்ன பத்தி எங்க அண்ணனுக்கு தெரியும். அண்ணன் மூலமா அம்மா அப்பாவுக்கும் இப்போ தெரியும். உனக்கு யாராச்சும் பிடிச்சிருக்கான்னு கேக்கறாங்க. அதுக்கு என்கிட்ட பதில் இல்ல. பேசாம இருக்குறதுக்கு பதிலா, பேசிட்டு பிரியாலாம்னு தான், I just want to say it in your eyes. Thanks for the love." என முடித்து எழுந்தான்.


"ஆதி..! You knew am an idiot. நீ என்ன அப்டியே விட்டுட்டு போயிருக்க கூடாது ஆதி. நேத்துதான் அம்மா கிட்ட பேசினேன். எல்லாமே சொன்னேன். உன்ன பத்தி. நம்மள பத்தி. உன்ன பாக்கணும் னு சொல்றாங்க. ஆனா, நீ வராத. வீட்டுக்கு போயி உங்க அப்பா அம்மாவை கூட்டிட்டு வா."


அவளின் கண்களில் தளும்பிய நீரை துடைக்க முற்பட்டவன் கண்ணீரை துடைக்க எழுந்தாள் அவள்.

ஆம். எதுவும் பிறர் தர வாரா.


 

Comments

  1. Unakulla um oru love iruku na paaren 💕 nice one da

    ReplyDelete
  2. That "illakiya Suvai" awesome. Keep post as much as you can. I have really missed your words man. Well, I'm impressed. Your narration gives life to the words. One of your best.

    -waran

    ReplyDelete
  3. 👍 True love never ends😀

    ReplyDelete
  4. Pahh!!✨❤️....semma feel!!

    ReplyDelete
  5. Nice word that you coined company puranma����. Good one, write more.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பாரதியாரின் ஆத்திச்சூடி _ ; புதுக்கதை விளக்கம்

நினைவுகளுக்கு இடமில்லை!!

ஒரு வில்லன் இருந்தான்