பிறர் தர வாரா

" ஹலோ, வந்துட்டியா..? இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்?" "ஆன் த வே. டிராபிக். 5 மினிட்ஸ் " 5 மினிட்ஸ் க்கான உட்பொருளை 15 நிமிடம் என நன்கு அறிந்து வைத்திருந்தான் ஆதித்ய கரிகாலன் (எ) ஆதி. 900 வினாடிகளில் ஆறு வருடத்தை ஒரு முறை மனத்திரையில் ஓட்டிக் கொண்டிருந்தான். முதல் நாள் மூன்றாம் வரிசையில் அவளும், நான்காம் வரிசையில் இவனும் கையில் வெல்கம் கிட்டுடன் அமர்ந்திருக்கையில், மனிதவள மேலாளரின் (HR Manager) அந்த நீண்ட நெடிய கம்பெனி புராணம் கேட்க, அந்த நாள் இன்னுமும் இவனுக்கு நினைவிருக்கிறது. அவ்வளவு ஏன் அன்றைய மணமும் மனதில் இருக்கிறது. Yardley Jasmine. அது அவள் மீது என்பதை 67 ஆம் நாள் உறுதி செய்துகொண்டான். வேலை முடிந்து வீடு திரும்ப எண்ணி மணிக்கட்டை திருப்பி காலம் கண்டபோது அது சொல்லிய பதில், 11 மணி 22 நிமிடங்கள். குறுஞ்செய்தி கூறிய எண்ணுடைய வண்டியை துப்பறிந்து ஏறி அமர, பக்கத்து இருக்கையில் இருந்து வந்த அதே Jasmine, மனம் கவர்ந்த மணம். அப்படி இப்படி என்று ஓடிய நாட்கள், நூறை தாண்ட அவள் பெயர், அவளின் தோழிகள், எம்ப்ளாயி ஐடி, ஈமெயில் ஐடி முக்கியமாக அவள் மொபைல் நம்பர் ...